வெள்ளை சாக்கடை!

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்காக நண்பர்களுடன் நாகர்கோயில் சென்றிருந்தேன்.. கல்யாணம் முடிந்த பின்பு, 'நாகர்கோயில்' என்று அவ்வூருக்கு பெயர் விளங்க காரணமான அந்த நாகராஜா கோவிலுக்கு சென்று வருவது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்..

ஏதோ கேரளாவுக்குள் நுழைந்தது போலிருந்தது அந்த ஊரின் எழில். எங்கு காணினும் பசுமையான வயல்கள், வாழைகள், தென்னைகள், நிரம்பிய குளங்கள் என்று செழுமையாக அந்த ஊர் காட்சியளித்தது. நாகர்கோவிலும் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அனேக பகுதிகளும் மொழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு முன் கேரளா திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் காரணமாகவோ என்னவோ பேச்சு, உணவு முதல் அனேக வழக்கங்களில் கேரளத்தின் தாக்கம் அங்கு இருக்கிறது. இதற்கு நாகராஜர் கோவில் மட்டும் விதி விலக்கு அல்ல. தொழுநோயால் பாதிக்கப்பட்டு, பின்பு நாகராஜரின் அருளால் குணமடைந்ததாக சொல்லப்படும் களக்காடு அரசரால் கட்டப்பட்ட இந்த கோவில், சமகால கேரளா கட்டிட வடிவமைப்பில் அமைந்துள்ளது. கேரளக் கோவில்கள் போல, இக்கோயில் உட்பட பெரும்பாலான கன்னியாகுமரிக் கோவில்களிலும் இன்னும் சட்டைய கழற்ற வேண்டிய நிர்பந்தம் உள்ளது.  இந்த கோவில் ஒரு காலத்தில் ஜெயின் மதத்தவரால் பேணப்பட்டு, வழிபடப்பட்டு வந்ததற்கான சான்றுகளும் கோவிலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இத்தகைய வரலாற்று சிறப்புகளுடைய அந்த கோவிலை காண அதீத கற்பனைகளுடனும் எதிர்பார்ப்புடனும் புறப்பட்டு, கோவிலை அடைந்தோம். தமிழ்நாட்டுக் கோவில்களில் சாமியை காண முடியுமோ இல்லையோ பிச்சை எடுக்கும் மனிதர்களை காண முடியும். பிச்சை போடுவது சரியா? தவறா? என்று எனக்குள் எப்பவும் நடக்கும் பட்டிமன்றத்துக்கு தீர்ப்பு வரும்முன் கோவிலுக்குள் நுழைந்துவிட்டேன்; பிச்சை போடாமலே.. 
எந்த கோவிலுக்குள் நுழைந்தாலும் ஒரு வகையான வாசனை நம்மை வரவேற்கும்.. அது பூவாக இருக்கலாம், நெய்யாக இருக்கலாம், வெண்ணையாக இருக்கலாம்.. இங்கும் ஒரு வாசம் வரவேற்றது.

கோவிலின் முகப்பு  

கோவிலில் நுழைந்தவுடன் என் கவனத்தை முதலில் ஈர்த்தது, பக்கவாட்டில் பாய்ந்தோடிய வெள்ளை நிற சாக்கடை. வெள்ளையும் மஞ்சளும் கலந்த அந்த சாக்கடை கொடிய கோடையிலும் வற்றாத நதி போல் ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளை நிறத்தில் சாக்கடையா என்ற ஆவலுடன் அதன் மூலத்தை காண சாக்கடையை தொடர்ந்தேன். சில வினாடிகள் தொடர்ந்த பின்பு, அதை பார்த்து நான் அதிர்ந்து போனேன், அது சாக்கடையல்ல.. பால் ஓடை...மிகையாக சொல்லவில்லை.. அது பால் ஓடை தான். கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் கையில் பால் பாக்கெட்டுகளுடன் காத்திருக்கிறார்கள். தங்கள் வாய்ப்பு வந்தவுடன் கையிலிருக்கும் பாலில் சிறிது மஞ்சளை கலக்கிறார்கள்.. அல்லது வெறும் பாலை அரசமரத்தை   சுற்றி இருக்கும் ஒவ்வொரு நாகர் சிலையின் மீதும் ஊற்றுகிறார்கள். பகதர்கள் ஊற்றிய பால் நாகராஜாவின் உடலையும் மனதையும் குளிர்வித்தபின் வந்து சேருவது சாக்கடையில்.

இதில் என்ன இருக்கிறது எல்லா ஊரிலயும் கோவில்லையும் நடக்கிறதுதானே என்பீர்கள்.. மிகவும் உண்மைதான்.. இது போன்ற கடவுளுக்காக அர்ப்பணிக்கப்படுவதாக சொல்லி உணவுப்பொருளை வீணடிக்கும் வேலை நிறைய கோவில்களில் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம்.. இங்கு வீணடிக்கப்படுகிறது.. மிகப் பெரிய அளவில்.. நம்பிக்கை என்ற பெயரில்.. கட்டுபடுத்த முடியாத அளவில்..
படித்தவன், பாமரன்  பாகுபாடின்றி அனைவரும் பால் வாங்குகின்றனர், குறைந்தது அரை லிட்டர். வாங்காதவன் வேற்று கிரகத்தவன் போல் பார்க்கப்படுகிறான். மிகப் பிரபலமான கோவில் என்பதால், இங்கு தினமும் குறைந்தது ஐநூறு பேர் வருவதாக வைத்துக்கொள்வோம்.. ஆக மொத்தம் தினமும் 250 லிட்டர். மாதத்திற்கு 7500  லிட்டர். என்னடா விஜயகாந்த் மாதிரி புள்ளி விபரம் சொல்றானே என்று எண்ணக் கூடாது. தினமும் 250 லிட்டர் பால் குடிக்க, நாகராஜா என்ன கும்பகர்ணனா? 

அவ்வளவு பாலும் கடவுள் பெயரால் சாக்கடையில் கலக்கவிடப்படிகிறது. ஒரு லிட்டர் பாலை கால்நடைகளில் உற்பத்தி செய்ய உழவன் எவ்வளவு கடின வேலை செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்.. ஆனால் இங்கு நம்பிக்கையின் பெயரில் அந்த உழைப்பு நாசம் செய்யப்படுகிறது. கமலின் 'விருமாண்டி' படத்தில் ஒரு வசனம் வரும்.."என் ஆத்தா கெணத்துல சாக்கடைய கலக்க விட்டுடனே.." என்று.. ஆனால் இங்கு பாலில் சாக்கடை கலக்கப்படவில்லை, பாலே  சாக்கடையாக ஓடுகிறது. 
ஊட்டசத்துக் குறைவால் ஒவ்வொரு வருடமும் 5.6 மில்லியன் குழந்தைகள் சாகும் இந்த இந்தியாவில், மாதம்  7500 லிட்டர் பால் கடவுளை திருப்திபடுத்த சாக்கடையில்.. அதுவும் ஒரு கோவிலில்.. பாமர மக்கள் அறியாமையில் செய்கிறார்கள் என்று ஒதுக்குவதற்க்கில்லை, ஏனெனில் இது நடப்பது  தமிழ்நாட்டில் கல்வியுற்றோர் அதிக விழுக்காட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில்.. இவ்வளவையும் செய்து விட்டு பால் விலையை உயர்த்தினால் தெருவுக்கு வந்து கோடி பிடிப்பார்கள் நம் மக்கள்.  

பால் அபிசேகம் செய்ய காத்திருக்கும் மக்கள் 

இந்த கோவில் ஒரு சான்று. இது போன்று இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கோவில்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தந்த கோவிலின் வளமைக்கேட்ப வீணடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.. உணவுப்பொருள்கள் அலட்சியப் படுத்தப்படுகிறது..  தஞ்சாவூர் பெரிய கோவில் உள்பட அரசர்களால் கட்டப்பட்ட கோவில்களில், அரசர்கள் காலத்தில் கௌரவத்திற்காக செய்யப்பட்ட ஆடம்பர அபிஷேங்கள் மேலும் ஆடம்பரமாக உருவெடுத்து பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. நடிகர்ளின் கட் அவுட்டுக்கு பால் ஊத்தும் ஒரே இனமும் நம்ம இனமாதான் இருக்க முடியும்.. இன்றைய ஆப்பிரிக்காவில் நிலவும் பஞ்சம் ஒரு காலத்தில் நாம் வாழும் இந்த இந்தியாவிலும் தான் கோரத்தை காட்டியிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். சமீபத்தில் கஞ்சிதொட்டிகள் வைத்து மக்கள் களைப்பாற்றிய நாடும் நாம் நாடுதான்.. வானம் பொய்த்தால், உழவன் உழைப்பை நிறுத்தினால், நமக்கே உணவும், பாலும் இருக்காது.. இதில் வாய் திறக்காத கடவுளுக்கு எங்கே கொடுப்பது??

பஞ்சத்தின் பிடியில் உணவுக்காக காத்திருக்கும் மக்கள், பெங்களூர் 1887  

ஆதி காலத்தில் வாழ்ந்த மனிதன் இயற்கையின் மேலிருந்த பயத்தால் அதை கடவுளாகவும், அதன் மனமகிழ, வேறேதுவுமில்லாததால்  தான் அறுவடை செய்த பண்டங்களையும் படைத்தது வணங்கினான். நம் முன்னோர்கள் கடவுளையும், பிற்காலத்தில் மதங்களையும், பேராசை பிடித்த மனிதர்களை நல்வழிபடுத்தவே தோற்றுவித்தார்கள் என்பது படித்தவர் எவருக்கும் சொல்லிப் புரிய வேண்டியதில்லை. மேற்கத்திய மோகத்தில், தாக்கத்தில் எவ்வளவோ நல்ல பழக்கங்களை நாம் தொலைத்திருக்கிறோம்.. ஆனால் நம் தொலைக்க தவறிய கொடுமையான வழக்கம், கடவுள் பெயரால் உணவுப் பொருளை வீணடிக்கும் இந்த கொடிய வழக்கம்.. முட்டாள் வழக்கம்..

கடவுள் நம்பிக்கையில் தவறில்லை.. நமக்கு எதாவது ஒரு காரணத்திற்காக கடவுள் தேவைப்படுகிறது, ஆனால் எக்காரணத்திற்காகவும் நம் உணவுப்பொருள் கடவுளுக்கு  தேவைப்படுவதில்லை. கடவுளே நேரில் வந்தால் கூட, இதை செய்பவர்களை முட்டாள்கள் என்றுதான் கூறுவார். 
என்னைப் பொறுத்தவரை பால் ஊற்றினால் போகும் தோஷம், தோஷமுமில்லை... அப்படிப் போக்கினால் அவர் கடவுளுமில்லை..!!!


கடவுளை மற...!!! மனிதனை நினை..!!! - பெரியார்.

1 comment:

  1. எதேச்சையா இந்த பதிவ பார்க்க நேர்ந்தது, சிந்திக்க தூண்டும் பதிவு மச்சி!

    ReplyDelete